வெப்பசலனம் காரணமாக கடலோர மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில் "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பசலனம் காரணமாக கடலோர மாவட்டங்களான காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையை பொறுத்த வரை வானம் மேமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பலத்த காற்று வீச வாய்ப்பிருப்பதால் மீனவர் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் செய்யூரில் 7 செ.மீ., ராமநாதபுரத்தில் 4 செ.மீ., ராமேஸ்வரத்தில் 4 செ.மீ., மண்டபத்தில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.