வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ‘’ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை ஆகிய தென் மாவட்டங்களிலும், சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய கடலோர மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு குறைந்துள்ளது. அந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும். தமிழக கடற்கரை பகுதிகளில் மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வரை காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள், அடுத்த இரண்டு நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.

மீனவர்கள் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம். வடமேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. அது சத்தீஸ்கர் நோக்கிச் செல்லும் பட்சத்தில் கேரளாவில் மீண்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் நடுவட்டம், தேவாலாவில் தலா 3 செண்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ஒரு சில இடங்களில் பெய்யக் கூடும்’’ எனக் கூறியுள்ளது.