கடந்த சில நாட்களாக தமிகத்தில் மழை ஓய்ந்திருந்த நிலையில் தென்மேற்கு பருவ மழை நிறைவடைந்துள்ளது. நேற்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதனால் தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று  சென்னை வானிலை மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு முதல் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இது மேலும் 24 மணி நேரத்திற்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறும் போது, வடகிழக்கு பருவமழை வலுவான நிலையில் இருப்பதாலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்தார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கோயம்புத்தூர், நீலகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் மாலத்தீவு, லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டியுள்ள கேரள கடற்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 14 செமீ மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் போட் கிளப் ஆகிய பகுதியில் தலா 13 செமீ மழையும், கடலாடியில் 12 செமீ, பரமக்குடி, கொடைக்கானலில் தலா 10 செமீ மழை பதிவாகி இருக்கிறது.