கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் சென்னையை சுற்றி இருக்கும் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

இதனிடையே வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 12 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 


இதுதொடர்பாக கூறிய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், வெப்பச்சலனம் மற்றும் காற்று மேல் அடுக்கு சுழற்சி காரணமாக 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய இருக்கிறது. தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய இருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் சில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் உடையாளிப்பட்டியில்  7 சென்டிமீட்டர் மழையும், தஞ்சாவூரில் 6 சென்டி மீட்டர் மழையும், திருமயம், கமுதி, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, வலங்கைமான், ஆத்தூர், பட்டுக்கோட்டை, சிவகங்கை, தேவகோட்டை, மயிலாடுதுறை, காரைக்குடி, ஆகிய இடங்களில் தலா 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது.

இவ்வாறு வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.