தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. தென்மேற்கு பருவமழை நிறைவடையும் தருவாயில் இருக்கும் நிலையில்  இரண்டு நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் அடுத்த சில தினங்களுக்கு தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் கூறும் போது, நாளையும், நாளை மறுநாளும் கடலோர தமிழகம், உள் தமிழகம் பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் தமிழகத்தில் வரும் 19-ம் தேதி வரை கனமழை பெய்யும். ஈரோடு, சேலம், தருமபுரி, தூத்துக்குடி உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே போல ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய தென்மாநிலங்களில் கனமழை பெய்ய இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. கோயம்பேடு, நுங்கம்பாக்கம், வேளச்சேரி, ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், ராமாபுரம், திருவல்லிக்கேணி, ஆழ்வார்பேட்டை, அடையாறு, அண்ணா சாலை, சைதாப்பேட்டை, தியாகராயநகர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.