தமிழகத்தில் கடந்த 1 வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்கிறது. இதன்காரணமாக அணைகள் நிரம்பி ஆறுகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழை மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாக வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நிலவுவதால் தமிழகம் மற்றும் புதுவையில் மழை நீடிக்கும் என்று அறிவித்துள்ளார். ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வங்கக்கடலில் சூறைக்காற்று வீச இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 13 சென்டிமீட்டர் மழை பெய்திருக்கிறது.