வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாக வானிலை மையம் மீண்டும் எச்சரித்துள்ளது.

அதன்படி, வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி உருவாகி நிலை கொண்டுள்ள காரணத்தால் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, சேலம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் இன்று (திங்கள் கிழமை) கனமழை பெய்ய இருக்கிறது.

இவைதவிர்த்த மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இந்த மழை 18 ம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை மையம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் அதிகபட்சமாக 12 சென்டிமீட்டர் மழையும், ஆரணி மற்றும் போளூரில் தலா 8 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது. மேலும் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை, விருதுநகர் மாவட்டம் சாத்தூர், வேலூர் மாவட்டம் ஆம்பூர், மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் ஆகிய இடங்களில் தலா 7 சென்டிமீட்டர் மழை பெய்திருப்பதாக வானிலை மையம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.