தமிழ்நாட்டில் மழையை தீர்மானிப்பதில், ஆட்சியில் இருக்கும் முதல்வரின் ராசியும் முக்கிய பங்கு வகிப்பதாக கிராமங்களில் பொதுவான ஒரு கருத்து காலங்காலமாக நிலவுகிறது. இந்த விஷயத்தில், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மழையை பெறுவதில் ராசியான முதல்வர் என்ற பெயரை பெற்றுள்ளார். முதல்வர் பழனிசாமி விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதாலோ, என்னவோ மழை அளவு வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக ஜூன் மாதத்தின் ஆரம்பத்திலேயே தொடங்கிய தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா காலத்தில் துவண்டு கிடக்கும் மக்களுக்கு ஒரே ஆறுதலாக அமைந்திருக்கிறது தென்மேற்கு பருவமழை, தினமும் வாசல் வரும் மழையால் மக்களின் மனஅழுத்தம் மட்டுமின்றி, விவசாயிகளின் வேதனையும் பறந்து போகிறது. தென்மேற்கு பருவக்காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டும் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 16 சதவீதம் அதிகம் பெய்திருந்தது. 

நடப்பு ஆண்டை பொறுத்தவரை ஜூன் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் முதல் தேதி வரை 52 சதவீதம் அதிக அளவில் மழை பதிவாகியுள்ளது. வழக்கமாக 133 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 202.3 மில்லி மீட்டர் அளவிற்கு கனமழை கொட்டித் தீர்த்து தமிழக மக்களை மகிழ்ச்சியில் திண்டாட வைத்துள்ளது. இதற்கு எல்லாம் விவசாயி ஆன முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ராசி தான் என கொங்கு மண்டலவாசிகள் புகழ்ந்து தள்ளுகின்றனர். 

காரணம் தமிழ்நாட்டை பொறுத்தவரை கொங்கு மண்டலங்களில் பெய்துள்ள மழை அளவு அப்படி, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் எதிர்பார்த்ததை விட இருமடங்காக மழை பெய்துள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் கோவை - 460.6 மி.மீ, திருப்பூர் - 156.3 மி.மீ, நாமக்கல் - 141.8 மி.மீ, நீலகிரி - 437 மி.மீ, ஈரோடு - 191.9 மி.மீ. தர்மபுரி - 217.6 மி.மீ, கரூர் - 167.3 மி.மீ, சேலம் - 251.2 மி.மீ, கிருஷ்ணகிரி - 211.6 மி.மீ, திண்டுக்கல் - 215 மி.மீ. அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை விவசாயிகளும் கட்சியின் ரத்தத்தின் ரத்தங்களும் (ர.ர.,)  புகழ்ந்து தள்ள முக்கிய காரணம் அவருடைய சிறப்பு திட்டமான குடிமாரமத்து பணிகள் ஆகும். “விண்ணில் இருந்து மண்ணில் விழும் ஒவ்வொரு நீர் துளி”யையும் சேமிக்க வேண்டியது நமது கடமை என்ற எண்ணம் கொண்ட முதல்வர் அவர்கள், ஏரி, குளங்களை தூர்வாருதல், தடுப்பணைகள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். 2017 - 18ம் ஆண்டு வரை 330 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், 2018 - 19ம் ஆண்டு வரை 499 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 4,865 பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டதால் தான் தற்போது மழை நீரை வீணாக்காமல் விவசாயத்திற்கு சேமிக்க முடிவதாக அதிமுகவினர் பெருமிதத்துடன் கூறிவருகின்றனர்.