தமிழகத்தின் 14 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மத்திய அரபிக்கடல், வடக்கு அரபிக்கடல் பகுதியில் அடுத்த 2 முதல் 3 நாட்களில் பருவமழை தீவிரமாவதற்கான சூழல் நிலவுகிறது. 

பருவமழை காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும், ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. தேனி மாவட்டம் போடி, தேவாரம், சங்கராபுரம், சின்னமனூர் உள்ளிட்ட பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது.

 

வெப்பச்சலனம் காரணமாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாருர், ராமநாதபுரம், திண்டுக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை பொருத்தவரை, 104 டிகிரி வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது.