வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் கூறுகையில், குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடலோர பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் தென் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய  வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மதுரை ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. மற்ற மாவட்டங்களிலும், புதுவையிலும் வெப்பசலனம் காரணமாக லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாலத்தீவு பகுதிகளில் சூறைக் காற்று வீச கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு, அப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.