பரபரப்பான அயோத்தி வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாக இருக்கிறது. இதன்காரணமாக நாடு முழுவதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசு சார்பாக அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் நேற்று இரவே தயார் நிலையில் இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

விடுமுறையில் சென்றிருந்த காவலர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள்  கூடும் முக்கிய இடங்களில் நேற்று இரவில் இருந்தே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

சமூக வலைத்தளங்கள் முழுவதும் தீவிரமாக கண்காணிப்பது வருகிறது. தீர்ப்பு எந்த வகையில் வந்தாலும் அதை மக்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்றும் எந்தவிதமான அசம்பாவித செயல்களிலும் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.