சென்னையைப் பொறுத்தவரை தேனாம்பேட்டை, அம்பத்தூர், அண்ணாநகர், அடையார், வளசரவாக்கம் ஆகிய இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருக்கிறது.
கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகமும் இடம் பெற்றுள்ளது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதால் பெற்றோர்களும், ஆசிரியர்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்க இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், இந்தியாவில் 19 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதில் தமிழ்நாடும் ஒரு மாநிலம் என்பது தான் உண்மையான நிலை. நாளொன்றுக்கு 7 ஆயிரம் வரை தொற்றுக்கள் பரவி வந்த நிலையில், தற்போது ஆயிரத்திற்குள் மட்டுமே தொற்று உள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மக்களின் முழு ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. தமிழக மக்களிடம் முகக்கவசம் பற்றிய விழிப்புணர்வு குறைந்து வருகிறது. எங்கு சென்றாலும் முகக்கவசம் அணியாமல் செல்வோரை காண முடிகிறது.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முகக்கவசம் அணிவது கட்டாயம். பிப்ரவரி மாதத்தை பொறுத்தவரை திருமணம், பிறப்பு, துக்க நிகழ்ச்சிகளால் கொரோனா தொற்று பரவியது. தற்போது அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்களால் தொற்று அதிகரிக்கிறது. மாஸ்க் அணியாவிட்டாலும் கொரோனா பரவாது என்ற அலட்சியம் மக்களிடம் காணப்படுகிறது. சென்னையைப் பொறுத்தவரை தேனாம்பேட்டை, அம்பத்தூர், அண்ணாநகர், அடையார், வளசரவாக்கம் ஆகிய இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருக்கிறது. கொரோனா பரவலை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. யார் எல்லாம் தகுதியானவர்களோ? அவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
