ஆதம்பாக்கத்தில் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் 3 பைக்குகள் எரிந்து நாசமானது.

சென்னை ஆதம்பாக்கம், பிருந்தாவன் நகர், ஷாவாலஸ் காலனி வழியாக உயரழுத்த மின்கம்பிகள் செல்கின்றன. இங்குள்ள ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோர் முன்பு செல்லும் உயரழுத்த மின்கம்பி, நேற்று காலை திடீரென அறுந்து விழுந்தது.

இதில், கடையின் முன் நிறுத்தப்பட்டிருந்த மடிப்பாக்கம், ராம் நகரை சேர்ந்த பத்மபிரியா, ஆதம்பாக்கம், கணேஷ் நகரை சேர்ந்த விமல்ராஜ், வேளச்சேரி, ராதா நகரை சேர்ந்த சங்கவி ஆகியோரின் 3 பைக்குகள் தீப்பிடித்து எரிந்தன. மேலும், டிபார்ட்மென்ட் ஸ்டோர் கடை முகப்பு பகுதியும் தீப்பிடித்தது.

தகவலறிந்து ஆதம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். வேளச்சேரி தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதற்கிடையில் ஆதம்பாக்கம் மின்வாரிய ஊழியர்கள் வந்து, மின் இணைப்பை துண்டித்து, அறுந்து கிடந்த மின்கம்பியை சீரமைத்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ''ஆதம்பாக்கம், பிருந்தாவன் நகர் பகுதியில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. பல கம்பிகள் துண்டு போட்டு இணைத்திருப்பதால், அவை அறுந்து விழுந்து உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. இவற்றை மாற்றி, புதிய மின்கம்பி அமைப்பதற்கு மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். பழுதான மின்கம்பிகளை அகற்றி, புதிய மின்கம்பிகளை அமைக்க வேண்டும்'' என்றனர்.