கொரோனா தொற்று காரணமாக 6 மாதங்களாக மூடப்பட்ட சென்னை கோயம்பேடு காய்கறி, மலர் சந்தை இன்று நள்ளிரவு முதல் திறக்கப்படுகிறது.

கொரோனா தொற்று பரவலால் கடந்த மே மாதம் 5-ம் தேதி கோயம்பேடு சந்தை அடைக்கப்பட்டது. இதற்கு மாற்றாக, பூந்தமல்லி அருகேயுள்ள திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை திறக்கப்பட்டது. திருமழிசை சந்தையில் போதிய வசதிகள் இல்லை என வியாபாரிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். மேலும், மழை நேரத்தில் அங்கு சேறும், சகதியுமாக காட்சியளித்தது.

இந்நிலையில், சுமார் 6 மாத இடைவெளிக்கு பிறகு கோயம்பேடு சந்தை  இன்று நள்ளிரவு முதல் திறக்கப்படுகிறது. ஆகையால், திருமழிசை சந்தை மூடப்பட்டது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை செய்யவும் ஒவ்வொரு கடை முன்பு கிருமி நாசினி வைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மொத்த காய்கறி சந்தையில் சரக்கு வாகனங்கள் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளது.