தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து விட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.

Governor R.N. Ravi Alleges Drug Use Increased in Tamil Nadu: தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து விட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி சுதந்திர தின உரையில் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய ஆளுநர் ரவி, ''பாசமிகு தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளே, நாட்டின் மிகச்சிறந்த நமது மனிதவளங்களில் சிறப்பானது நம்முடையது. நமது இளைஞர்கள் ஆர்வமும், தொழில்முனைவுத்திறனும் மிக்கவர்கள். நமது உள்கட்டமைப்பு கணிசமான பலத்தைக் கொண்டது. நமது இளைஞர்களின் திறமைகளைக் கட்டவிழ்ந்து, அவர்களின் அனுகூலமான திறமைகளுக்கு வாயப்பு கொடுக்க மக்கள் எதிர்நோக்கும் மிகத் தீவிர சவால்களில் சிலவற்றை முழுமனதோடு நாம் எதிர்கொள்ள வேண்டும். அவற்றில் நான்கை நான் குறிப்பிட்டுக் கூற விரும்புகிறேன்.

ஆளுநர் ரவி வைத்த 4 முக்கியமான குற்றச்சாட்டுகள்

1.ஏழைகள் மற்றும் விளிம்புநிலையில் இருப்போருக்கு எதிரான கல்வி மற்றும் சமூகப் பாகுபாடு. 2.அதிர்ச்சியூட்டும் தற்கொலைகள் அதிகரிப்பு. 3.இளைஞர்களிடம் வேகமாக பரவும் போதைப்பொருள் பயன்பாடு. 4.பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்கள்-சிறுமிகளுக்கு எதிராக இழைக்கப்படும் பிற பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு. தனியார்துறை பொதுத்துறை ஆகிய இரண்டிலும் நாட்டிலேயே நமது மாநிலத்தில் தான் மிகச்சிறந்த கல்வித்துறை உள்கட்டமைப்புகள் உள்ளன.

அரசு பள்ளிகளில் கற்பித்தல் திறன் மிக மோசம்

வெளிப்படை காரணங்களால் ஏழைகள் மற்றும் விளிம்புநிலையில் இருப்போருக்கு, அரசின் கல்விக் கட்டமைப்புகள் ஒரே நம்பிக்கை நமது இளைஞர்களில் 60 சதவீதம் பேர் அரசு நடத்தும் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். சமூகத்தில் அவர்கள் பெரும்பாலும் வறியநிலை மற்றும் விளிம்புநிலையில் இருப்பவர்கள் வருத்தமளிக்கும் வகையில், இந்தப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் தரநிலைகள் அதிக வீழ்ச்சியைக் கண்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் தொடர்ச்சியாக. ASER அறிக்கை எனப்படும் கல்வித்தரம் பற்றிய வருடாந்திர அறிக்கை, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல், தேசிய சராசரியை விட மிகவும் குறைவானதாக இருக்கும் அதிர்ச்சி உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறது.

மாணவர்களுக்கு கூட்டல் கழித்தல் தெரியவில்லை

50 சதவீதத்துக்கும் அதிகமான உயர்நிலைப் பள்ளி மாணவர்களால் இரண்டு இலக்க கூட்டல் கழித்தல்களைக் கூட செய்ய இயலவில்லை. தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி கல்விச் சூழல் தொடர்ந்து சரிந்து வருகிறது. சமூக பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் பிறருக்கும் இடையே கற்றல் இடைவெளி கூர்மையாக அதிகரித்து வருகிறது. வேலைவாய்ப்புகளின்றி வெறும் படிப்புச் சான்றிதழ்களைப் பெற்றவர்களாக அவர்கள் வெளியேறுகிறார்கள். தரமான கல்வி இல்லாத நிலையில், அவர்களால் ஒருபோதும் சமூக மற்றும் பொருளாதார பாகுபாடுகளைக் கடந்து கண்ணியத்துடன் வாழ முடியாது.

தலித்துகளுக்கு நடக்கும் கொடுமை

தலித்துகள் மற்றும் பிறரைப் பிரித்து வைக்கும் சுவர்கள் கிராமங்களிலும், பள்ளிகளிலும் கட்டப்பட்டு வருவதாக ஊடகசெய்திகளில் அன்றாடம் பார்க்கிறோம் பொதுப்பாதையை பயன்படுத்த முற்படும்போது தலித்துகள் உடல் ரீதியாக தாக்கப்படுகிறார்கள். சில நேரங்களில் கொல்லப்படுகிறார்கள். சமூக பாகுபாட்டுக்கு எதிராக நாம் சபதம் ஏற்க வேண்டும். தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது மனதை கலங்கச்செய்கிறது.

தமிழகத்தில் தற்கொலைகள் அதிகரிப்பு

ஆண்டொன்றுக்கு 20,000 பேர் தற்கொலை செய்து கொள்வதாக, அதாவது அன்றாடம் 65 தற்கொலைகள் நடப்பதாக, தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.இது மிகஅதிர்ச்சி அளிக்கிறது. இது நாட்டிலேயே மிக அதிகம். தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும். இது ஒரு தேசியப் பெருந்துயரமும் ஆகும். நமது சமூகத்தில் துல்லியமாக சமூகம் சார்ந்த, உளவியல் சார்ந்த அல்லது பொருளாதாரம் சார்ந்த இடர்பாடுகளின் பிரதிபலிப்பே இந்த தற்கொலைகள் இந்த ஆபத்தான குழ்நிலையைத் தணிக்க அவசர தீர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வேண்டும்.

போதைப்பொருள் பயன்பாடு மிக அதிகம்

போதைப்பொருள் பயன்பாடு குறிப்பாக இளைஞர்கள் மத்தியிலே கடுமையாக அதிகரித்து வருகிறது. கவனிக்கத்தக்கதாக கஞ்சாவிலிருந்து ரசாயன போதைப்பொருளுக்கு இளைஞர்கள் மாறிவரும் போக்கு நிலவுகிறது. கடந்த 2024ஆம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களை விட அதற்கு முந்தைய ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரசாயன போதைப்பொருள்களை ஒப்பிட்டால் அவற்றின் அளவு 14 மடங்கு அதிகமாகும் இது பெரிய அளவில் நமது இளைஞர்களின் உயிரை பலி வாங்குகிறது. அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் சக்திபடைத்தவர்கள் செயல்படுவதால் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகிறது. போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு

சமீபத்திய ஆண்டுகளில், நமது மாநிலத்தில் பாலியல் குற்றங்கள், குறிப்பாக சிறார் (போக்ஸோ) பாலியல் சம்பவங்கள் அதிகரிப்பதைக் காண முடிகிறது. அலுவல்பூர்வ தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் 56 சதவீத அளவுக்கு போக்ஸோ பாலியல் வல்லுறவு வழக்குகள் அதிகரித்தன. பெண்களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமை சம்பவங்கள் 33 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளன. நமது சகோதரிகளும் மகள்களும் தங்களின் வீட்டை விட்டு வெளிவர அச்சப்பட்டும் பாதுகாப்பற்றவர்களாகவும் உணர்கிறார்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாதது, வருந்தத்தக்கது மற்றும் இரும்புக்கரம் கொண்டு கடுமையாக ஓடுக்கப்பட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.