உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. இதையடுத்து கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு அமலில் இருக்கிறது. கடைகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு மக்கள் யாரும் வெளியில் நடமாட கூடாது என அரசு அறிவித்திருக்கிறது.

எனினும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் காய்கறி கடைகள், மருந்தகங்கள், மளிகை கடைகள், பால் வியாபாரம் போன்றவை தொடர்ந்து நடந்து வருகிறது. இதனிடையே ஊரடங்கு உத்தரவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் அனைத்து அரிசி ரேஷன் கார்டு காரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் ஏப்ரல் மாதத்திற்கு இலவசமாக அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை வழங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்த நிவாரண உதவிகள் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 15ம் தேதிக்குள் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

tamilnadu government announces 1000 rs for people and provides token

அதன்படி நிவாரண உதவித் தொகையான ஆயிரம் ரூபாய் மற்றும் ரேஷன் பொருட்கள் அனைத்தும் இன்று முதல் வழங்கப்ப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை திருவாரூர் துர்கா லயா சாலையில் நியாய விலை கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் பங்கேற்று தொடங்கி வைத்தார். நிவாரண பொருட்கள் வழங்கும் நேரங்களில் ரேஷன் கடைகளில் மக்கள் அதிகளவில் கூடுவதை கட்டுப்படுத்தும் வகையில் டோக்கன் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு இடங்களில் டோக்கன் அச்சிடப்பட்டு வீடு வீடாக விநியோகிக்கப்பட்டுள்ளது. இத்திட்டதின் மூலம் தமிழகம் முழுவதும் 367499 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைய உள்ளனர்.