சென்னை மேடவாக்கம் அரசுப் பள்ளியில் ஆசிரியர் தாக்கியதால் மாணவனின் கண் பார்வை பறிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை பள்ளிகரணையை சேர்ந்தவர்கள் வேலு- ரேகா தம்பதியினர். வேலு அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் தொழிலாளியாக உள்ளார். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இதில், முதல் மகனான கார்த்திக் (14) மேடவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 4-ம் தேதி பள்ளிக்குச் சென்ற கார்த்திக்கின் பின் மண்டையில் பெண் ஆசிரியயை இரும்பு ஸ்கேலால் அடித்ததாக கூறப்படுகிறது.

இதில், கார்த்திக்கின் தலையில் லேசான காயம் ஏற்பட்ட நிலையில் சிறிது தினங்களில் அவருக்கு பார்வை கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் கண் மருத்துவமனையை அணுகிய நிலையில், மாணவரின் மூளையில் ரத்தக்கசிவு மற்றும் அவரது கண் சற்று வெளியே வந்துள்ள அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்ததின் பேரில் மாணவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. ஆனால், எதிர்பாராத விதமாக மாணவர் கார்த்திக்கின் இடது கண் பார்வை பறிபோனதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆசிரியர் தாக்கியதாலேயே மாணவனுடைய பார்வை பறிபோனதாக பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும், இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், இதுவரை காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.