மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை கூடுதலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். 2,472 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கணினி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பிப்ரவரி மாதத்திற்கு பிறகு அனைத்து ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளதால் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்காது.

அதே போன்று 4,017 ஆய்வக உதவியாளர் பணியிடம் ஒரே தேர்வில் தேர்வு செய்யப்பட்டு, அனைத்து பள்ளிகளிலும் ஆய்வக உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தேர்வு மையத்தின் மூலம் தேர்வு செய்யப்படும்போது ஒவ்வொரு முறையும் யாராவது வழக்கு தொடர்ந்து வருகின்றனர். இனி அதை தவிர்க்க ஆசிரியர் தகுதி தேர்வாணையத்திற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஆசிரியர்கள் தலைமையாசிரியராக பதவி உயர்வு செய்யும் நடவடிக்கையில் அரசு மேற்கொண்டு உள்ளது. அரசு பள்ளிகளில் குடிநீர் மற்றும் கழிவறை வசதி செய்ய அந்த பகுதியில் உள்ள முன்னாள் மாணவர்கள், தொழிலதிபர்களை அழைத்து உள்ளோம். செயல்பாட்டில் இல்லாத பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் நிரப்புவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு அரசுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்து விட்டதால் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் ஜனவரி முதல் வாரத்தில் நிரப்பப்படும்.