சென்னை அண்ணாசாலையில் மாநகர பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கணவர் கண்முன்னே மனைவி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. 

சென்னை தியாகராயநகர் கிரி ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் சூரிய நாராயணன்(65). இவர், நேற்று காலை தனது மனைவி எழிலரசி (59) என்பவருடன், அண்ணாசாலை டிவிஎஸ் வழியாக இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அண்ணாசாலை சர்ச் பார்க் பள்ளி அருகே, முன்னால் சென்ற காரை சூரிய நாராயணன் முந்தி செல்ல முயன்றபோது, பின்னால் வேகமாக வந்த மாநகர பேருந்து இருசக்கர வாகனம் மீது இடித்தது. இதனால் இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர். 

அப்போது, பிராட்வேயில் இருந்து வண்டலூர் நோக்கி சென்ற மாநகர பேருந்து (தடம் எண்:E18) எழிலரசி மீது ஏறி இறங்கியதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சூரிய நாராயணன் லேசான காயத்துடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவலறிந்து வந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், எழிலரசி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திண்டிவனத்தை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.