இன்று முதல் தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சி எல்லைப் பகுதிகளில் உள்ள 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வருமானம் வரும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டது. இதை தொடர்ந்து அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. இருப்பினும், கோயில்களில் மட்டும் அர்ச்சகர்கள் மூலம் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதல்கட்டமாக ஜூலை 1ம் தேதி கிராமங்களில் உள்ள 10 ஆயிரத்துக்கும் குறைவாக வருமானம் வரும் கோயில்கள், சர்ச், மசூதிகள்  திறக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1ம் தேதி பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. தொடர்ந்து, மாநகராட்சி எல்லை பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்கள் ஆகஸ்ட் 10ம் தேதி திறக்கப்படும் என்று நேற்று முன்தினம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் இன்று முதல் தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சி எல்லை பகுதிகளில் உள்ள 10 ஆயிரத்துக்கு குறைவான வருமானம் வரும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல் உடற்பயிற்சி கூடங்களும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.