சென்னையில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே நேரத்தில் மால்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் மதுபானக்கடைகள் இயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் செயல்பட்டு வந்த 5,300 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு அமலில் இருந்தபோதும், தமிழக அரசு பல்வேறு தளர்வுகளின் அடிப்படையில் மே 7ம் தேதி சென்னை மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிளை தவிர்த்து, தமிழகத்தின் பிற பகுதிகளில் 3,700 கடைகள் திறக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சென்னையில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது. இதனையடுத்து, கடந்த வாரம் சென்னை டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் மீண்டும் பணிக்கு திரும்பவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், நாளை முதல் டாஸ்டாக் கடை திறக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தவிர மதுபான சில்லறை விற்பனை கடைகள் கடந்த மே 7ம் தேதி முதல் திறந்திட தமிழக அரசு உத்தரவிட்டு மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த மதுபான சில்லறை விற்பனை கடைகள் வரும் 18 ஆம் தேதி முதல் இயங்கும். மேலும், மால்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் மதுபானக் கடைகள் இயங்காது.

மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். மதுபானக் கடைகளுக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் மற்றும் தனி மனித இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடித்தல் வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.