கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுமார் 9 மாதங்கள் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் 40 சதவீதம் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது கொரோனா பரவல் ஓரளவு குறைந்துள்ள நிலையில் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி வரும் 19-ம்தேதி முதற்கட்டமாக 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கிடையில் தற்போதைய கல்வி ஆண்டில் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை முழு அளவில் நடத்த முடியாத நிலை இருப்பதால், பாடத்திட்டங்கள் கணிசமான அளவில் குறைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில். தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்: 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 50 சதவீத பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம், குறைக்கப்பட்ட பாடத்திட்டம் பற்றிய முழு விவரங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். இந்த குறைக்கப்பட்ட பாடதிட்டம் குறித்த விவரங்கள், பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட உள்ளன. அதன் அடிப்படையில், இந்த கல்வி ஆண்டில், மீதம் உள்ள நாட்களில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.