ஆவடி அருகே திருமுல்லைவாயலில் 4வயது சிறுமி பாலியல் கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் டி.கே.விஸ்வநாதன் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், அந்தோணி நகர், 3வது தெரு சேர்ந்தவர் ராஜேந்திரன். தனியார் நிறுவன ஊழியர் இவரது மனைவி செந்தமிழ் செல்வி. இத்தம்பதிக்கு கார்முகிலன் ( 7) என்ற மகனும், சன்மதி (4) என்ற மகள் உண்டு. இந்நிலையில் கடந்த மாதம் 27ந்தேதி மாலை தனது மகன் கார்முகிலனை வீட்டிலிருந்து அதே பகுதியில் உள்ள டியூசன் சென்டருக்கு செந்தமிழ்ச்செல்வி அழைத்து சென்றார்.  அப்போது, வீட்டில் சன்மதி மட்டும் தனியாக இருந்து உள்ளாள்.

சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய செந்தமிழ்ச்செல்வி, வீட்டு கழிப்பறைக்குள் சாக்கு பையில் வைக்கப்பட்டு சன்மதி கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர் மீனாட்சிசுந்தரம் (60) என்பவர் சன்மதியை பாலியல் கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்து செய்தது தெரியவந்தது. இதற்கு அவரது மனைவி ராஜம்மாள் (56) என்பவரும் உடந்தையாக  இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 

இச்சம்பவம் திருமுல்லைவாயல் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. மேலும், குற்றவாளியான மீனாட்சிசுந்தரத்திற்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என கூறி பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர்.

மேலும், பெண்கள் அமைப்பினர் மீனாட்சிசுந்தரம் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரன், ஆவடி உதவி கமிஷனர் ஜான் சுந்தர் ஆகியோர் மீனாட்சிசுந்தரத்தின் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை மாநகர கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர்.

இவர்களது பரிந்துரையை ஏற்று கமிஷனர் டி.கே.விசுவநாதன் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவுக்காக ஆணையை திருமுல்லைவாயல் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீசார் புழல் சிறை அதிகாரியிடம் சமர்ப்பித்தனர். இதனையடுத்து மீனாட்சிசுந்தரம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு வருடம் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.