உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை உண்டாக்கி இருக்கும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இன்றைய நிலவரப்படி 12,380 பேருக்கு இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் 414 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக கடந்த 14ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி மே 3ம் தேதி வரை இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு நடைமுறை கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

அனைத்து மாவட்டங்களில் கட்டுபாடுகள் கடுமையாக்கப்பட்டு காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் நிலையில் ஊரடங்கு நடைமுறை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு தனிமைப்படுத்தல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துவதை வலியுறுத்தி சென்னையில் பொது இடங்களில் மக்கள் ஒன்றாக கூடுவதை தடை செய்து சென்னை பெருநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி ஊரடங்கு காலத்தில் பொது இடங்களில் ஐந்திற்கும் மேற்பட்ட நபர்கள் குழுவாக கூடுவதை தடைசெய்வதாக காவல் ஆணையர் கூறியுள்ளார். 

பின்வரும் நாட்களில் ஊரடங்கு தொடர்பாக மீண்டும் ஏதேனும் அறிவிப்புகள் வரும்பட்சத்தில் அவற்றுக்கும் இவ்வுத்தரவு பொருந்தும் என்றும் தடையுத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் ஆணையர் எச்சரித்திருக்கிறார். பொதுமக்களின் நலன் கருதியும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமைதியை கருத்தில் கொண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் காவல் ஆணையாளர் பொதுமக்கள் அவற்றிற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். ஏற்கனவே மார்ச் 23ல் இருந்து 31ம் தேதி வரையும் பின் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து 15ம் தேதி வரையும் சென்னையில் 5 நபர்களுக்கு மேல் கூடுவதற்கு தடை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அது தற்போது நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.