தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், 5,330 மதுக்கடைகள் வாயிலாக, மது வகைகளை விற்பனை செய்கிறது. அந்த கடைகளில், தினமும் சராசரியாக, 100 கோடி ரூபாய் மதிப்பிலான, மதுபானங்கள் விற்பனையாகின்றன. வாரத்தின் அனைத்து நாட்களும் செயல்படும் மதுக் கடைகளுக்கு, ஆண்டுதோறும், காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், குடியரசு, மே தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட எட்டு நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. அதன்படி, காந்தி ஜெயந்தியான, வரும் அக்டோபர் 2ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

எனவே சில்லரை மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள் மதுபான கடைகளும், மது அருந்தும் இடங்களும் திறக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து ஓட்டல் பார்களிலும் மது விற்ககூடாது. இதனை மீறி எவரேனும் கடைகள், மது அருந்தும் கூடங்களில் மதுபானங்கள் விற்றாலோ, திறந்து வைத்திருந்தாலோ கடை மேற்பார்வையாளர், பார் உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.