சென்னையில் 2 நாட்கள் நடைபெறும் ஜி-20 கூட்டமைப்பின் 2-வது பணிக்குழு மாநாடு! முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை
ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் கல்வி, நிதி, பொருளாதாரம், உணவு, சுற்றுச்சூழல், பேரிடர் மேலாண்மை, காலநிலை மாற்றம், சர்வதேச உறவுகள் என பல்வேறு விஷயங்கள் குறித்த விவாதங்களை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெறும் ஜி-20 பணிக்குழு கூட்டத்தில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தகவல் தெரிவித்துள்ளார்.
ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் கல்வி, நிதி, பொருளாதாரம், உணவு, சுற்றுச்சூழல், பேரிடர் மேலாண்மை, காலநிலை மாற்றம், சர்வதேச உறவுகள் என பல்வேறு விஷயங்கள் குறித்த விவாதங்களை நடத்தி வருகின்றனர். இந்தியாவிலும் முக்கிய நகரங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கல்வி தொடர்பான மாநாடு சென்னையில் கடந்த ஜனவரி 31, பிப்ரவரி 1ம் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற்றன.
இந்நிலையில், ஜி-20 கூட்டமைப்பின் 2-வது நிதி கட்டமைப்பு பணிக்குழுவின் மாநாடு சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. மத்திய அரசின் நிதி அமைச்சக தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன், இங்கிலாந்து நிதித்துறையின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிளாரி லொம்பார்டெலி ஆகியோர் கூட்டத்துக்கு தலைமை வகிக்கின்றனர்.
இதுதொடர்பாக மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- நிதி கட்டமைப்பு பணிக்குழு கூட்டத்தில் 20 நாடுகளை சேர்ந்த 80க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த கூட்டத்தில் முக்கியத்துவம் வழங்கப்படும். உணவு, எரிசக்தி நிதி பரிமாற்றத்திற்கான வழிகள் ஆகியவை குறித்து பிரநிதிகள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ள உள்ளனர். பொருளாதார மாற்றம், உணவு பொருட்கள், பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு, சுற்றுச்சூழல் குறித்து குழு விவாதங்கள் நடக்கும். பொருளாதார வளர்ச்சிக்கான நடைமுறை சாத்தியக் கூறுகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.