சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது வதந்தி என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், நேற்றைய  நிலவரப்படி தமிழகத்தில் 34,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 18,325 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 307ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி வருகிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் கணிசமாக சென்னையிலேயே நோய்த் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன. 

இதுதொடர்பாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அதில், சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது வதந்தி என ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.