தமிழகத்தில் ஜூலை மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு  தமிழகத்தில் நீட்டிக்கப்பட்டது. தலைநகர் சென்னையில் படிப்படியாக கொரோனா  தொற்று குறைந்துவரும் நிலையில் மற்ற மாவட்டங்களல் வேகமாகப் பரவி வருவதால், இந்த நடவடிக்கையை தமிழக அரசு அறிவித்தது. அதேவேளையில் கடந்த ஜூலை மாதத்தைப் போலவே அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.


அதன்படி ஆகஸ்ட் மாதத்தில் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று நள்ளிரவு 12 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த ஊரடங்கு இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமலில் இருக்கும்.  அத்தியாவசிய தேவைகளான பால் கடை, மருந்தகங்கள், மருத்துவமனைகள் மட்டுமே இன்று இயங்கும். அதேபோல இதர அத்தியாவசிய தேவைகளான காய்கறி, மளிகைக் கடைகள், உணவகங்கள், பெட்ரோல் பங்குகள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும். மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

 
அத்தியவாசிய, மருத்துவ வாகனங்களுக்காக மட்டும் சொற்ப அளவிலான பெட்ரோல் பங்குகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மக்கள் வீடுகளை விட்டு தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று காவல் துறையும் சுகாதாரத்துறையும் அறிவுறுத்தியுள்ளன.