சென்னை திருவேற்காட்டில் முன்னாள் ரூட்டு தல திருமணத்தில், பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புதுமாப்பிள்ளையை மாமியார் வீட்டில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

சென்னை திருவேற்காடு பகுதியில் நடைபெற்ற பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் ரூட் தலை ஒருவரின் திருமண விழாவில் குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் மணமகன் கூட படித்த மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது, மணமக்கள் மேடையில் ஏறிய பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் பட்டா கத்தியை மணமகன் மற்றும் மணமகள் கையில் கொடுத்து கேக் வெட்ட சொல்லி அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், பட்டா கத்தியால் கேக் வெட்டியும், பட்டா கத்தியுடன் நடனமும் ஆடியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து, பட்டாகத்தியுடன் ஆட்டம் காட்டிய 2 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இந்நிலையில், கோயம்பேட்டில் மாமியார் வீட்டில் இருந்த புதுமாப்பிள்ளை புவனேஷை திருவேற்காடு போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இதுபோன்ற நிகழ்வு தொடர்ந்து அரங்கேறி வருகிறது. கடந்த வாரம் பட்டாகத்தி மூலம் கேக் வெட்டியது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.