சென்னையை சுற்றிலும் சாலை விரிவாக்கம், புதிய புதிய வணிக வளாகங்கள் கட்டுதல் என்கிற பெயரில் பல ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதனால் முறையான மழை பொலிவின்றி சென்னையில் அதிகமான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியுள்ளது. 

கடந்த கோடை காலத்தில் சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடியது. மக்கள் தண்ணீருக்காக குடங்களை தூக்கிக்கொண்டு அலையும் நிலை ஏற்பட்டது. இதே நிலைமை நீடித்தால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் சில ஆண்டுகளில் வெகுவாக குறைந்து விடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

இதை தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தக்கோரி அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் இதன் ஒருகட்டமாக சென்னையை சுற்றிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வனத்துறை சார்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி சென்னை பெருங்குளத்தூர் -மாதவரம் இடையே இருக்கும் 32 கிலோமீட்டர் தூரத்தில் 22000 மரக்கன்றுகள் நடப்பட்ட உள்ளன. முதற்கட்டமாக 1200 மரக்கன்றுகள் நட பணிகள் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் 22000 மரக்கன்றுகளை நடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறிய ஸ்ரீபெரும்புதூர் வனத்துறை ரேஞ்சர் கல்யாண், "மரக்கன்றுகளை நட்ட பிறகு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மரக்கன்றுகள் அனைத்தும்  தண்ணீர் ஊற்றி முறையாக பராமரிக்கப்படும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மரக்கன்றுகள் முழுமையாக வளர்ந்து நெடுஞ்சாலைக்கு ஒரு பசுமையையும், நிழலையும் வழங்குவதோடு ஒரு அழகான தோற்றம் அளிக்கும். அடுத்த கட்டமாக, திருத்தணி-திருப்பதி சாலையில் மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

கடந்த 2003 ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட தங்க நாற்கர சாலை திட்டத்தின் போது ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டது. அப்போது சாலைகள் முழுமையாக அமைக்கப்பட்ட பிறகு மரங்கள் நடப்பட்டு தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக பராமரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.