மும்பை அருகே எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று 700 பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கியது. பேரிடர் மீட்பு படையினர் மேற்ெகாண்ட முயற்சியினால் அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ரயில் மற்றும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விமானங்களும் தாமதமாகவே புறப்பட்டுச் செல்கின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மும்பையில் இருந்து கோலாப்பூர் புறப்பட்டுச் சென்ற மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் தானே மாவட்டம் பத்லாப்பூர் மற்றும் வான்கனி இடையே வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. அந்த ரயிலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 700 பயணிகள் இருந்தனர்.

பலத்த மழையால் தண்டவாளங்கள் நீரில் மூழ்கி இருந்ததாலும் உல்லாஸ் ஆறு கரைபுரண்டு ஓடியதாலும் அந்த ரயிலால் சம்தோலி என்ற இடத்துக்கு அப்பால் செல்ல முடியவில்லை. சுற்றிலும் வெள்ளநீர் சூழ்ந்திருக்க நேற்று அதிகாலையில் இருந்து நடு வழியில் அது நின்றது. தண்டவாளத்தில் நீர்மட்டம் அதிகரித்துக் கொண்ேட சென்றதால் பயணிகள் பீதியடைந்தனர்.

சம்பவ இடத்துக்கு ரயில்வே பாதுகாப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர், போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். வெள்ளத்தில் சிக்கியுள்ள பயணிகள் படகுகள் மூலமாக மீட்கப்பட்டனர்.

பயணிகளை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த இரண்டு குழுக்கள் ஈடுபட்டன. மேலும், ஹெலிகாப்டர் மற்றும் கடற்படையின் உதவி கோரப்பட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மீட்புக் குழுவினரின் துரித நடவடிக்கையால் ரயிலில் இருந்த 700 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் பத்லாப்பூர் ரயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டதாக மத்திய ரயில்வே மூத்த செய்தித் தொடர்பாளர் ஏ.கே.ஜெயின் கூறினார். சிறப்பு ரயில் மூலமாக அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் பயணிகளுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ரேஷ்மா காம்ப்ளே என்ற அந்த பெண் பயணி பிரசவத்துக்காக, மகாலட்சுமி எக்ஸ்பிரசின் ‘டி-1’ பெட்டியில் மும்பையில் இருந்து கோலாப்பூருக்கு சென்று கொண்டிருந்தார். ஆனால் அந்த ரயில் வெள்ளத்தில் சிக்கி நின்றுவிட்டது. அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து பீதியடைந்த உறவினர்கள், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யும்படி வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து பேரிடர் மீட்பு படையினர் விரைந்து செயல்பட்டு அந்த ரேஷ்மாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலில் மேலும் 9 கர்ப்பிணிப் பெண்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரி ஒருவர் கூறினார்.

மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலைச் சுற்றி 3 முதல் 5 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றது. அந்த ரயில் பயணிகளை மீட்க இந்திய ராணுவம், இந்திய விமானப்படை, இந்திய கடற்படை, தேசிய பேரிடர் மீட்பு படை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டன.

தானே மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஏக்நாத் கெய்க்வாட் மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டார். சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களும் ரயில் பயணிகளை மீட்பதில் உதவி செய்தனர்.