சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனையில் மொத்தம் ரூ.1.1 கோடி மதிப்புடைய 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. உபி, திருச்சியை சேர்ந்த பயணிகள் உள்பட 5 பேரை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சிங்கப்பூரில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது திருச்சியை சேர்ந்த கமல்ராஜ் (52) என்பவர் சுற்றுலா பயணியாக சிங்கப்பூருக்கு போய்விட்டு திரும்பி வந்தார்.

இவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து இவரை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.

இதையடுத்து அவருடைய உடைமைகளை சோதனையிட்டனர். அவரது உடைமைகளில் எதுவும் இல்லை. பின்பு அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்தனர். இவருடைய உள் ஆடைக்குள் 548 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தார். இதன் சர்வதேச மதிப்பு ரூ. 19.7 லட்சம். இவரையும் கைது செய்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

இதைதொடர்ந்து, தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து ஏர் ஏசியா விமானம் சென்னை வந்தது. அதே நேரத்தில் இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது.

2 விமானங்களில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த நூரில் ஹக் (26) மற்றும் சென்னையை சேர்ந்த அகமது (22) ஆகிய 2 பேரை பிடித்து சோதனையிட்டனர். 2 பேரின் உள் ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த 716 கிராம் தங்க கட்டிகளை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.25.8 லட்சம்.

இதையடுத்து ரியாத்தில் இருந்து ஓமன் ஏர் லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். இந்த விமானத்தில் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த முகமது செரீப் (32) என்பவரும், சென்னையை சேர்ந்த ஷேக்தாவூத் (34) என்பவர்கள் வந்தனர். இவர்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. முகமது செரீப் உடைமைகளை சோதனையிட்டனர்.

அதில் ஏராளமான எல்ஈடி பல்புகள் மற்றும் ரீசார்ஜ் பேட்டரி, ஸ்டேண்ட் ஆகியவைகள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் திறந்து பார்த்து சோதித்த போது, அதனுள் மொத்தம் 12 தங்க துண்டுகள் இருந்ததை கண்டு பிடித்தனர். இதன் மொத்த எடை 1.4 கிலோ. இதன் சர்வதேச மதிப்பு ரூ.50.32 லட்சம்.

இதையடுத்து தங்க துண்டுகளை பறிமுதல் செய்து முகமது செரிப்பை கைது செய்தனர். அதே போல் ஷேக்தாவூத்தை சுங்க அதிகாரிகள் சோதித்த போது அவரது உடைமைகளில் எதுவும் இல்லை. பின்னர் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்த போது 300 கிராம் தங்கத்தை அவர் மறைத்து வைத்திருந்தார். இதன் மதிப்பு ரூ.13 லட்சம்.

இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்து அவரையும் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனையில் மொத்தம் ரூ.1.1 கோடி மதிப்புடைய 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. உபி, திருச்சி பயணி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.