தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தினமும் புதிய உச்சத்தை எட்டிவருகிறது. தமிழ்நாட்டில் தினமும் சராசரியாக 12 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுவருகிறது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்படாத அதேவேளையில், பாதிப்பு மட்டும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

இன்றும் வழக்கம்போல அதே அளவிலான பரிசோதனைகள் தான் செய்யப்பட்டன. இன்று 12807 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 1149 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஒரு நாளில் பதிவான உச்சபட்ச பாதிப்பு இதுதான். 

நேற்று 938 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இன்று 1149 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 22333ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 804 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. எனவே சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 14802ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஒருநாளில் 20 ஆயிரம் பரிசோதனைகளை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் இன்னும் 12 ஆயிரம் என்ற அளவிலேயே பரிசோதனைகள் செய்யப்படும் நிலையில், பாதிப்பு மட்டும் சீராக அதிகரித்து கொண்டிருப்பது வருத்தமளிக்கக்கூடியதுதான். 

கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைவது மட்டுமே ஒரே ஆறுதல். அந்தவகையில், இன்று ஒரே நாளில் 757 பேர் டிஸ்சார்ஜ் ஆகியிருப்பதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 12,757ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்திருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை 173ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்றுதான் அதிகபட்சமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர்.