கொரோனா ஊரடங்கால், இந்த பெருந்தொற்றுக்கு பயந்து அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோர் தங்கள் உயிரை பணயம் வைத்து, சுயநலமின்றி, பொதுநலத்துடன் மக்களுக்காக சேவையாற்றிவருகின்றனர். 

கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு முழு பாதுகாப்பு உடை, மாஸ்க் ஆகியவைகள் வழங்கப்பட்டு, அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. 

ஆனாலும் சில மருத்துவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இன்று கூட சென்னையில் 3 முதுநிலை மருத்துவர்கள் உட்பட 4 பேருக்கு கொரோனா உறுதியானது.

கொரோனாவால் தேசிய அளவில் 2 காவல்துறையினர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் கொரோனாவிற்கு ஒரு மருத்துவர் உயிரிழந்துள்ளார். நரம்பியல் நிபுணரான அவர், சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில்  நிர்வாக இயக்குநராக இருந்துள்ளார். அவருக்கு கொரோனா உறுதியானதையடுத்து அப்போலோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். 

அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாகவே இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். கொரோனாவிற்கு மருத்துவர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனாவிற்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம், நேற்று ஆகிய 2 நாட்களும் தமிழ்நாட்டில்ம் கொரோனாவால் யாருமே உயிரிழக்காத நிலையில், இன்று மருத்துவர் உயிரிழந்துள்ளார்.