சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் தீ விபத்து; தீபாவளி கொண்டாட்டத்தில் விபரீதம்!
சென்னை மயிலாப்பூரின் வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோவிலில் கட்டப்பட்டு வரும் கோபுரத்தில் ராக்கெட் வெடியின் மோதி தீப்பற்றியது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோவில் கோபுரத்தில் தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது வெடித்த பட்டாசு பட்டு தீப்பற்றியது. தீயணைப்புப் படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
மயிலாப்பூரின் வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் சாய்பாபா கோவில் உள்ளது. இந்தக் கோயில் சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக வியாழக்கிழமைகளில் அதிக பக்தர்கள் வருகை காணப்படும். பொதுமக்கள் முதல் முக்கியப் பிரமுகர்கள் வரை சாய்பாபா கோவிலில் வழிபடச் செல்கிறார்கள். தற்போது அங்கு கோபுரக் கட்டுமானப் பணிகள் நடக்கிறது.
மனசை லேசாக்கும் வீடியோ கேம்... வேறு எதுவும் எனக்குத் தெரியாது: மனம் திறக்கும் எலான் மஸ்க்!
இந்நிலையில், இன்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது, வெடிக்கப்பட்ட ராக்கெட் பட்டாசு ஒன்று கோபுரக் கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த ஓலை மறைப்பின் மீது விழுந்துவிட்டது. இதனால், ஓலையில் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. அப்பகுதி மக்கள உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
மாலை 6.15 மணி அளவில் இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கிறது. தகவல் அறிந்ததும் மூன்று தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சம்பவ இடத்தை அடைந்தன. கோபுரத்தின் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, அரைமணிநேரப் போராட்டத்துக்குப் பின் தீ அணைக்கப்பட்டது. சீக்கிரம் தீ அணைக்கப்பட்டதால், தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல் ஏதும் இல்லை. தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது சாய்பாபா கோவில் அசம்பாவித சம்பவம் நடைபெற்றது அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
களைகட்டிய தீபாவளி முகூர்த்த வர்த்தகம்! பங்குச்சந்தையில் அனைத்து துறைகளும் ஏறுமுகம்!