மயிலாப்பூரில் பிரபல இனிப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் மதிப்புள்ள இனிப்பு வகைகள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானது.

சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோயில் தெருவில் பிரபல இனிப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. நேற்று காலை ஊழியர்கள் வந்து கடையை திறந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடையின் உள்ளே இருந்து திடீரென கரும் புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ கடைமுழுவதும் பரவியது. இதை பார்த்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், கடையில் எண்ணெய் மற்றும் நெய் வகைகள் அதிகளிவில் இருந்ததால் தீ கட்டுப்படுத்த முடியவில்லை.

உடனே இதுகுறித்து ஊழியர்கள் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி மயிலாப்பூர், தேனாம்பேட்டை, ராயப்பேட்டை பகுதியில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த 20க்கும் மேற்பட்ட வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தினர்.

ஆனால் அதற்குள் கடையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள இனிப்பு வகைகள் மற்றும் பொருட்கள் அனைத்து எரிந்து நாசமானது. பிறகு தீ அருகில் உள்ள கடைகளுக்கு பரவாமல் தீயணைப்பு வீரர்கள் தடுத்தனர். உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மின் கசிவு காரணமாக தீ விபத்து குறித்து ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.