முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் ஸ்பாட் பைன்..! சென்னை போலீசார் அதிரடி..!
சென்னையில் முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி பாக்கெட்டில் முகக் கவசம் வைத்தும் , முகக் கவசத்தை முகத்தில் மாட்டாமல் கழுத்தில் செயின் போன்று மாட்டி அலட்சியமாக சென்றவர்களிடமும் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் கைக்குட்டையை முக கவசம் போன்று பயன்படுத்திவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது
தமிழகத்தில் தாறுமாறாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று நேற்று ஒரே நாளில் 786 பேருக்கு புதியதாக உறுதிப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,753 ஆக உயர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக தலைநகர் சென்னை விளங்கிறது. அங்கு நாளுக்கு நாள் எகிறி வந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நேற்று வெளியான அறிவிப்பின்படி சென்னையில் மட்டும் 569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் சென்னையில் மொத்தமாக 9,364 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை சென்னையில் 5,523 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.
சென்னையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதை அடுத்து தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாதிப்பு அதிகம் இருக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே சென்னையில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு வரும் போது மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டுமெனவும் மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னையில் முகக் கவசம் அணியாமல் வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகளை பிடித்து போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலித்து வருகின்றனர்.
முகக் கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படுவது மட்டுமின்றி பாக்கெட்டில் முகக் கவசம் வைத்தும், முகக் கவசத்தை முகத்தில் மாட்டாமல் கழுத்தில் செயின் போன்று மாட்டி அலட்சியமாக சென்றவர்களிடமும் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் கைக்குட்டையை முக கவசம் போன்று பயன்படுத்திவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போலீசாரின் நடவடிக்கையை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் கூறியிருக்கும் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், ‘இனிமேல் முக கவசம் அணியாமல் வெளியே வரக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முக கவசம் அணியாமல் வாகனத்தில் வருவோருக்கு ரூ.500-ம், நடந்து வருபவர்களுக்கு ரூ.100-ம் அபராதம் வசூலிக்கப்படும்’ என்றார். முன்னதாக அபராதம் வசூலிக்கப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு போலீசார் இலவசமாக முகக் கவசம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.