அதை செய்து, இதை செய்து, எதிலும் பலன் இல்லை என்பதால், இறுதியாக என்எல்சி பணியாளர்கள் தற்போது குழந்தையை மீட்கும் பணியில் குதித்துள்ளனர்.  குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளை கிணற்றிற்கு அருகில் சுமார் ஒன்றரை மீட்டர் தொலைவில் துளையிட்டு குழந்தையை மீட்க தீவிரம்காட்டிவருகின்றனர். இது இறுதி கட்ட முயற்சியாக கருதப்பட்டாலும் இந்த முயற்சியில் குழந்தையை மீட்பது உறுதி என்ற நோக்கில் அவர்களின் பணி வேகமாக நடந்து வருகிறது. 

ஆழ்துளை கிணற்றில் சுமார் 80 அடி ஆழத்தில் கடந்த 24 மணிநேரமாக சிக்கியுள்ள குழந்தை சுஜித்தை மீட்க  சுமார் 53 பேர் கொண்ட தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் போராடிவருகின்றனர். இந்நிலையில்  அவர்கள் கொண்டு வந்துள்ள அதிநவீன கண்காணிப்பு கேமிரா மூலம் ஆழ்துளையில் குழந்தையின் நிலைமை குறித்து தொடர்ந்து கவனித்து வருகின்றனர். அத்துடன் குழந்தை சுவாசிக்க டியூப் வழியாக தொடர்ந்து குழிக்குள் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டுவருகிறது.  மற்றும்  கிளிப் போன்ற கருவியைக் கொண்டு குழந்தையை  மீட்க முயற்சித்து வருகின்றனர். அத்துடன் சிறுவனைப் பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை  இன்னும் ஒரு மணிநேரத்தில் மீட்டுவிடுவோம், அரைமணி நேரத்தில் மீட்டு விடுவோம் என்று மீட்புப்படையினர் ஆறுதல் கூறிவருகின்றனர். 

இது அங்குள்ளவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திவந்தாலும்,  அவர்கள் எடுக்கும் முயற்சிகளில் பெரிய அளவில் பலன் இல்லை. இந்நிலையில் அந்தப் பகுதியில் மழைபெய்துவருவதும் மீட்புப் படையினருக்கு அச்சத்தை ஏற்படுத்திவருகிறது. அத்துடன் மழை அதிகமாகி நீர் துளைக்குள் சென்றுவிடாதவாறும் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 70 அடி ஆழத்தில் இருந்த குழந்தை சற்று முன் 80 அடி ஆழத்திற்கு சரிந்துள்ள நிலையில் மீட்புப் பணியில் தொய்வை ஏற்படுத்தியுள்ளது. ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் ஊற்று இருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் குழந்தையை மீட்கும் பணி மிகவும் நிதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படைக்கு துணையாக  நெய்வேலி நிலக்கரி சுரங்க பணியாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.  குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளை கிணறுக்கு அருகில் சுமார் ஒரு மீட்டர் தூரத்தில் துளைபேட்டு குழந்தையை தூக்க திட்டமிட்டு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.