தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரியும், விவசாயக் கடன் வசூலை தள்ளிவைக்க கோரியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு மற்றும் விவசாய சங்கம் சார்பாக நேற்று வாலாஜா சாலையில் சேப்பாக்கம் இரயில்வே பாலத்தின் கீழ் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

30 நாட்கள் போராட அனுமதி கேட்டிருந்த நிலையில் உயர்நீதிமன்றம் நேற்று (21/10/2019) ஒரு நாள் மட்டும் காவல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை போராட்டம் நடத்த அனுமதியளித்திருக்கிறது. அதன்படி காலை 10 மணியளவில் போராட்டம் தொடங்கப்பட்டது. நேரம் செல்ல செல்ல அதிகளவில் போராட்டக்காரர்கள் தமிழகம் முழுவதிலும்  இருந்து திரண்டு வந்துள்ளனர். அவர்கள் மேல் சட்டை அணியாமல் அரை நிர்வாணத்துடன் போராடினர். அப்போது சில விவசாயிகள் பாதி மீசையையும், தலையில் பாதி மொட்டையும் அடித்துக்கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இதுகுறித்து போராட்டத்தில் கலந்துகொண்ட பாகனூர் முருகன் என்கிற  விவசாயி கூறும்போது " நாங்க 30 நாள் அனுமதி கேட்டோம். ஆனா இன்னிக்கு ஒருநாள் மட்டும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை மட்டும் காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் போராட அனுமதி கொடுத்தாங்க.. டெல்லி ல நாங்க நடத்தின போராட்டம் இந்திய அளவில் பல மாநில விவசாயிகளை போராட தூண்டியது. ஆனா அந்த போராட்டத்தை மட்டுபடுத்திட்டாங்க.. அதனாலயே இந்த போராட்டத்துக்கு எங்களுக்கு நெறய கெடுபிடிகள் இருக்கு.. விவசாய கடன் தள்ளுபடி கேட்டு போராடுறோம். மத்திய அரசு மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயிரிட்டு விவசாயத்தை பெருக்க சொல்லுது. அது நமக்கு பாதிப்பானது. அதனால மரபணு மாற்றப்பட்ட விதைகளை இந்தியாவில் தடை செய்ய வலியுறுத்தியும் போராட்டம் நடத்துறோம்" என்றார்.

அய்யாக்கண்ணு தலைமையிலான இந்த விவசாய சங்கமானது ஏற்கனவே டெல்லியில் அரை மொட்டையுடனும் நிர்வாணமாகவும் எலி கறி உண்டும் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.