மெரினா கடற்கரையில் எப்போதும் காதல் ஜோடிகள் நிறைந்து காணப்படும். வார இறுதி நாட்களில் எங்கு பார்த்தாலும் காதல் ஜோடிகள் தான் தெரிவார்கள். அந்த அளவிற்கு மெரினா காதல் ஜோடிகளின் புகலிடமாக இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று இரவு காமராஜ் சாலையில் இருக்கும் நேதாஜி சிலை பின்புறம் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் தனது காதலியுடன்  அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு நபர், காவலர் என்று கூறி அவர்களிடம் விசாரணை நடத்துவது போல பேசியுள்ளார்.

தான் போலீஸ் என்றும், இவ்வாறு நீங்கள் சுற்றித் திரிவதை வீட்டில் சொல்லிவிடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார். பின்னர் அவர்களிடம் பணம் தந்து விட்டு இடத்தை காலி செய்யுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அந்த இளைஞர் பணம் தர மறுத்திருக்கிறார். போலீஸ் என்று கூறிய நபர் அந்த இளைஞரை கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதை பார்த்த அங்கிருந்த மக்கள், போலீஸ் என்று கூறிய நபரிடம் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். அப்போது தான் அவர் உண்மையான போலீஸ் இல்லை என்று தெரிய வந்திருக்கிறது. உடனே அவரை கையும் களவுமாக பிடித்த மக்கள் ரோந்து வாகனத்தில் வரும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அந்த நபரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அவர் கும்பகோணத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்று தெரிய வந்தது. பல நாட்களாக தன்னை காவலர் என்று அடையாளப்படுத்தி காதல் ஜோடிகளிடம் பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை சிறையில் அடைத்து மேற்கொண்டு காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.

போலீஸ் போல் நடித்து மெரினாவில் பணம் பறிப்பில் ஈடுபட்ட சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.