Asianet News TamilAsianet News Tamil

காசா கிராண்ட் மோசடிக்கு துணைபோன தமிழக அரசு? உடந்தையாக இருந்த ஒருத்தரையும் சும்மாவிடாதீங்க! நாராயணன் திருப்பதி

பத்திர பதிவு அலுவலகம் அனாதீன நிலத்தில் பல்வேறு குடியிருப்புகளை பதிவு செய்தது எப்படி? அனாதீன நிலம் என்று தெரிந்தும் அந்த தனியார் நிறுவனம் மக்களிடம் பணம் பெற்று பதிவு செய்தது எப்படி?

fake land issue casagrand..Narayanan Thirupathy criticized tamil nadu government tvk
Author
First Published Feb 4, 2024, 6:56 AM IST

சட்ட விரோதமாக காசா கிராண்ட்  நிறுவனத்தால் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் அந்நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்: காசா கிராண்ட்' (Casa Grande) கட்டுமான நிறுவனம் சென்னை நாவலூர் அருகே உள்ள தாழம்பூரில் கட்டிய அடுக்கு மாடி குடியிருப்பில் பல லட்சங்களை முதலீடு செய்து வீடு வாங்கிய 500க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு இதுவரை முறையான சொத்து ஆவணங்களை அந்நிறுவனம் வழங்கவில்லை என்றும் பட்டா பதிவு செய்ய முடியாத சூழல் நிலவுகிறது உள்ளிட்ட பல்வேறு  குற்றச்சாட்டுகளை  முன் வைத்துள்ளனர். கடந்த நான்கு வருடங்களாகவே 500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவும் ஒரு  செய்தி என்று கடந்து போய் விட முடியாது. இந்த நிலம் குறித்த வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: கைத்தட்டுதல்களுக்காக இப்படி மோசமா பேசுவீங்களா? சி.வி.சண்முகத்தை லெப்ட் ரைட் வாங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

1. உரிய ஆவணங்கள், பட்டா இல்லாமல் எப்படி பத்திரப்பதிவு செய்தார்கள் என்ற கேள்வி உடனடியாக எழுகிறது. 

2. 500 வீட்டின் சொந்தக்காரர்கள் எப்படி உரிய ஆவணங்கள் இல்லாமல் பதிவு செய்வதற்கு ஒப்பு கொண்டார்கள்?

3. அதேபோல், பெரும்பாலோனோர் (குறைந்தது 90%), வங்கிகளின் மூலம் கடன் பெற்றுத்தான் வீடுகளை வாங்கியிருப்பார்கள் ? அப்படியானால், வங்கிகள் எப்படி குறைபாடுள்ள ஆவணங்களை சட்ட ரீதியாக பதிவு செய்ய, கடன் வழங்க அனுமதித்தார்கள்? எந்த வங்கி அல்லது வங்கிகள் கடன் கொடுத்துள்ளன?

4. இந்த குடியிருப்பு அமைந்திருக்கும் ஒரு பகுதி நிலம், அனாதீன நிலம் (அரசாங்கம் கையகப்படுத்தியிருக்கும் உரிமையற்ற நிலம்), தனி நபர் உரிமை கொண்டாட முடியாது என்று அரசு குறிப்பிட்டிருக்கும் நிலையில், இந்த நிலத்தை எப்படி பதிவு செய்தார்கள்? யார் இதற்கு துணை புரிந்தது என்பது போன்ற பல கேள்விகள் எழுகின்றன.

5. பத்திர பதிவு அலுவலகம் அனாதீன நிலத்தில் பல்வேறு குடியிருப்புகளை பதிவு செய்தது எப்படி? அனாதீன நிலம் என்று தெரிந்தும் அந்த தனியார் நிறுவனம் மக்களிடம் பணம் பெற்று பதிவு செய்தது எப்படி?

6. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு ஆவணத்தையும்  கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு பார்க்க வேண்டிய வங்கிகள் முறை தவறி, சட்ட விரோதமாக கடன் கொடுத்தது ஏன்? யார்? 

7. கடந்த நான்கு வருடங்களாக குடியிருப்பு வாசிகள் புகார் அளித்தும் மாநகர காவல் துறை நடவடிக்கை எடுக்காதது என்? 

8. சாமான்ய மக்களை ஏமாற்றினால் அரசு இயந்திரம் கண்டு கொள்ளாதா?

9. இது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதாக சொல்லப்படுகிற நிலையில், வழக்கு கட்டுமான நிறுவனத்திற்கு பாதகமாக வரும் நிலையில், வீட்டின் சொந்தக்கார்களுக்கு நிறுவனம் பணத்தை திருப்பி கொடுக்குமா?

10. ஒரு வேளை, தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பானால், வங்கிகளின் அடமானத்தில் இருக்கக்கூடிய வீடுகளின் நிலை என்ன? வங்கிகளின் பணம் திரும்பி வர வாய்ப்பில்லை என்பது உண்மையா?

11. அதே போல், தீர்ப்பு வாடிக்கையாளர்களுக்கு பாதகமாக அமைந்தால், வங்கிகளுக்கு/ நிறுவனத்திற்கு செலுத்திய பணம் திரும்பி வராது என்பது உண்மையா இல்லையா?

12. செலுத்திய பணமும் திரும்ப வராத நிலையில், சொத்தும் பறிபோகிற நிலையில், பொது மக்களின் இந்த துயர நிலைக்கு காரணம் யார்?

சந்தேகமேயில்லாமல் இது ஒரு மிக பெரிய மோசடி உரிய விசாரணை தேவை. இந்த தவறுக்கு காரணம் மாநில அரசு இயந்திரம் தான் என்பதில் சந்தேகமில்லை. அதே போல் இந்த விவகாரத்தில் வில்லங்கம் உள்ளது என்பதை கண்டறியாத வங்கி/வங்கிகளுக்கும் மிக பெரிய பொறுப்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது. மக்களை ஏமாற்றி விற்ற நிறுவனம் பொறுப்பேற்று கொள்ள வேண்டும். வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால், இறுதியில் ஏமாற்றப்பட்ட, பாதிப்புக்குள்ளான மக்களே இன்னலை அனுபவிப்பார்கள். ஏமாறுபவர்கள் உள்ள வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள்.

இதையும் படிங்க: பீகாரை விட பின் தங்கி உள்ளோமா? ஒரே மேடையில் விவாதிக்க தைரியம் உள்ளதா? அண்ணாமலைக்கு அமைச்சர் சவால்

இந்த விவகாரத்தில் கடந்த நான்கு வருடங்களாக நடைபெற்று வரும்  நீதிமன்ற நடவடிக்கைகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும். கட்டுமான நிறுவனம் தவறு செய்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தரப்பட வேண்டும். வாய்ப்பிருந்தால், அனாதீன நிலத்தை பாதிக்கப்பட்டவர்களின் உரிமைக்கு விட வேண்டும். தவறு செய்திருந்து, சட்ட விரோதமாக அந்த நிலம் தனியார் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால், அந் நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

வாயை கட்டி, வயிற்றை கட்டி, சிறுக சிறுக சேமித்து, கடனை திருப்பி செலுத்த போராடும் சொந்த வீட்டின் கனவினால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். குற்றச்சாட்டு நிரூபணமானால், தவறு செய்தவர்கள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios