கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கூறியுள்ளார். 

உலகம் முழுதும் கொரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கிஉள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 42,151ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சமூக தொற்று பெருமளவில் கட்டுப்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. 

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவானது மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி பொதுமக்களிடையே பரவலாக எழுந்தது. இதற்கு விளக்கமளித்த மத்திய அமைச்சரவை செயலர், ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் எண்ணம் தற்போது வரை இல்லை என தெரிவித்தார். இந்நிலையில்,  சென்னையில் மட்டும் 144 தடை எனப்படும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 15-ம் தேதி காலை 6 மணிவரை நீட்டித்து காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், 144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.