இ-பாஸ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வழங்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்ததையடுத்து பொதுமக்கள் சென்னைக்கு படையெடுத்து வருகின்றனர். 

தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து ஒரே இடத்தில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும், சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், பொதுமக்கள் தேவையற்ற பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்கும் நோக்கிலும்தான் இ-பாஸ் நடைமுறை கொண்டு வரப்பட்டது. 

குறிப்பாக, திருமணம், மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம் ஆகிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. மேலும், திருமணம், இறுதிச் சடங்கு, மருத்துவத் தேவை போன்றவை தவிர மற்ற பயணங்களுக்காக விண்ணப்பித்தால் இ-பாஸ் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இதில் முறைகேடு நடைபெறுவதாக தொடர்ந்து புகார் எழுந்த நிலையில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யவேண்டும் என அரசியல் கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், இன்று முதல் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ்  எவ்வித தாமதமும், தடையுமின்றி உடனுக்குடன் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதனையடுத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த 5 மாதமாக இருந்த இ-பாஸ் கெடுபிடி, இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. அதே வேலையில், இ-பாஸ் நடைமுறை எளிமையாக்கப்பட்டதால், சென்னைக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.  பொங்கல், தீபாவளி பண்டிகையை முடித்து சென்னை மக்கள்  திரும்புவது போல், சுங்கச்சாவடியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.