சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை சமாளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டது தான் மின்சார ரயில் சேவை. சென்னை கடற்கரை - தாம்பரம் வரையிலும், வேளச்சேரி - கடற்கரை வரை என இரு மார்க்கமாக மின்சார ரயில்கள் சேவை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக அவ்வப்போது மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை செல்லும் பறக்கும் ரயில் சேவை நாளை 6 மணி நேரம் நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே ஞாயிறு ( செப்டம்பர் 15 ) காலை 7 50 மணி முதல் மதியம் 1 50 மணி வரையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மேற்கண்ட நேரங்களில் மின்சார ரயில்களின் சேவை இருமார்கத்திலும் நிறுத்தப்படுகிறது. மொத்தம் 36 சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.

பின்னர் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு மதியம் 2 மணிக்கும், வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கு மதியம் 2 10 மணிக்கும் முதல் ரயில் சேவை தொடங்கும்.

இவ்வாறு ரயில்வே துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.