உலகத்தையே உலுக்கிய எடுத்துக்கொண்டிருக்கும் கொடூர கொரோனா வைரஸ் நோய் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இன்றைய நிலவரப்படி 4 ஆயிரத்து 67 பேருக்கு இந்தியாவில் கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில் 109 பேர் பலியாகி இருக்கின்றனர். கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக தற்போது நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி இருக்க அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்திய மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக ஏப்ரல் 6-ஆம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் வரை வீட்டில் இருக்கும் மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல்விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட், செல்போன் பிளாஷ் போன்றவற்றை ஒளிரச் செய்ய வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது கோரிக்கைக்கு ஏற்ப நேற்று இரவு நாடு முழுவதும் மக்கள் இரவு 9 மணி அளவில் மின் விளக்குகளை அணைத்து அகல்விளக்கு தீபங்கள் ஏற்றி ஒற்றுமையை உலகிற்கு எடுத்துக் காட்டினர். குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் என ஏராளமானோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

தமிழகத்திலும் பிரதமரின் கோரிக்கைக்கு மிகப்பெரிய ஆதரவு இருந்தது. இதனிடையே நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மின் விளக்குகளை அணைத்ததன் மூலமாக 31 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்சாரம் சேமிக்கப்பட்டு இருப்பதாக தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் குறிப்பிட்ட ஒன்பது நிமிடங்களில் 2200 மெகாவாட் மின்சார பயன்பாடு குறைந்து இருப்பதாகவும் சென்னையில் மட்டும் 350 மெகாவாட் அளவுக்கு மின்சார பயன்பாடு குறைந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார். மேலும் ஒரே நேரத்தில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு மீண்டும் ஆன் செய்ததால் மின்சாரப் பயன்பாட்டில் எந்தவித பிரச்சனையும் நிகழவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.