தமிழகத்தில் இன்று முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சிய 27 மாவட்டங்களில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவிற்காக 24,680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இதில் மொத்தம் 1 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர். தேர்தல் பணிகளில்  4 லட்சத்து 2 ஆயிரத்து 195 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் 60 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

விறுவிறுப்பாக நடைபெறும் இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 11 வகையான ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

பாஸ்போர்ட், ஆதார் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, ஸ்மார்ட் ரேஷன் கார்டு, ஓய்வூதிய ஆவணம், மருத்துவ காப்பீட்டுக்கான ஸ்மார்ட் கார்டு, 100 நாள் பணி அட்டை, மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு புகைப்படத்துடன் வழங்கப்பட்ட அடையாள அட்டை, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் அடையாள அட்டை, அஞ்சலக பாஸ்புக் ஆகியவற்றைக் கொண்டு வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.