நாடாளுமன்றத் தேர்தலை முதல் கட்டத்திலேயே நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் மனு கொடுத்திருந்தது. அதை ஏற்று தேர்தல் ஆணையம் இரண்டாம் கட்டத்தில் தேர்தல் நடத்த தேதியை அறிவித்திருப்பதால், அதிமுக மகிழ்ச்சி அடைந்திருக்கிறது. 
மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை, மக்களவை அதிமுக நாடாளுமன்ற குழு தலைவர் டாக்டர் வேணுகோபால் ஆகியோர் பிப்ரவரி 6ஆம்  தேதி டெல்லி தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், ‘மே மாதத்தில் தமிழகத்தில் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவும் என்பதால், முதல் கட்டத்திலேயே நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்’ என்று கேட்டிருந்தார்கள்.


வழக்கமாக தமிழகத்தில் மே மாதத்தில் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவுவது வாடிக்கை. இதுபோன்ற காலத்தில் காலி குடிநீர்  குடங்களுடன் பொதுமக்கள் போராடுவதும் வாடிக்கை. இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால், பிப்ரவரி மாத இறுதியிலேயே தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கோடை காலத்தில் இந்தப் பற்றாக்குறை சற்று கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
அந்த நேரத்தில் தேர்தல் நடந்தால், ஊருக்குள் வாக்குகள் கேட்டு செல்லும் ஆளுங்கட்சி வேட்பாளர்கள் கடும் எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஆளும் அதிமுக கருதியது. அப்படி எழும் எதிர்ப்புகளை எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. ஆனால், தேர்தலை முதல் கட்டத்திலேயே நடத்தி முடித்துவிட்டால், எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று அதிமுக தரப்பில் யோசிக்கப்பட்டது.
அதன் காரணமாகவே தேர்தலை முதல் கட்டத்திலேயே நடத்தி முடிக்க அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. இது பற்றி கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதியே ‘முதல் கட்டத்திலேயே தேர்தலுக்கு வலியுறுத்தும் அதிமுக... பின்னணி என்ன?’ என்று தலைப்பில் எழுதியிருந்தோம். 
அதிமுக கேட்டுக்கொண்டபடி ஏப்ரல் 18-ஆம் தேதி இரண்டாம் கட்டத்தில் தேர்தல் ஆணையம் தேதியை அறிவித்துள்ளதால், அதிமுக தரப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளது. தண்ணீர்ப் பற்றாக்குறை பூதாகரமாக வெடிப்பதற்கு முன்பே தேர்தல் முடிந்துவிடும் என்பதால், பிரசாரத்தில் எந்தச் சிக்கலும் இருக்காது என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அதேவேளையில் குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்க சுமார் 160 கோடி ரூபாய் வரை தமிழக அரசு ஒதுக்கியிருப்பதால், அந்தப் பணிகளை அரசு துரிதப்படுத்தும் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.