வங்கிகளுக்கு கடும் போட்டியாக மாறியதால் அஞ்சல்துறையில் டெபிட்கார்டு விநியோகம் முன்னறிவிப்பு ஏதுமின்றி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பிஎஸ்என்எல்-ஐ போன்று அஞ்சல் துறையும் நிதி நெருக்கடியில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அஞ்சல் துறையின் கீழ் 1 லட்சத்து 56 ஆயிரம் அஞ்சலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி என்று நான்கு மண்டங்களின் கீழ் 94 தலைமை அஞ்சலகங்கள் மற்றும் 12 ஆயிரத்து 186 அஞ்சலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

அஞ்சல்துறையில் கடித சேவை வெகுவாக குறைந்துவிட்டது. இந்தநிலையில் பார்சல் சேவை, பாஸ்போர்ட் பிரிவு, இன்சூரன்ஸ், இந்தியா போஸ்ட் பேமன்ட் பேங்க் உள்ளிட்ட வசதிகள் அடுத்தடுத்து புதியதாக தொடங்கப்பட்டுள்ளன. வங்கி சேவையில் முழுமையாக கால் பதிக்கும் வகையில் அஞ்சல் துறை திட்டமிட்டப்பட்டது. இதற்காக சீரோ பேலன்சில் கணக்கு தொடங்கவும் அனுமதி வழங்கப்பட்டது. லட்சக்கணக்கானோர் இந்த திட்டத்தில் புதியதாக கணக்கு தொடங்கியுள்ளனர்.

மேலும் ரூ.50 செலுத்தி சேமிப்பு கணக்கு தொடங்கினால் சேவை கட்டணமின்றி எத்தனை முறை வேண்டுமானாலும் ஏடிஎம்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டதால் சேமிப்பு கணக்குகள் தொடங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. குறைந்தபட்ச இருப்பு தொகை ரூ.50 என்று இருந்தால் போதும் என்பதும் இதன் சிறப்பு ஆகும். இதனை தொடர்ந்து டெபிட்கார்டு பெறுவதற்கு கடும் போட்டி நிலவியது.

நாடு முழுவதும் அஞ்சல் துறை சார்பில் 991 ஏடிஎம்கள் மட்டுமே உள்ளன. ஒவ்வொரு தலைமை தபால் நிலையத்திற்கும் ஒன்று என்ற அடிப்படையில்தான் ஏடிஎம்கள் திறக்கப்பட்டுள்ளன. முதலில் இந்த ஏடிஎம்களில் மட்டுமே அஞ்சல் துறையால் வழங்கப்படும் டெபிட்கார்டுகள் செல்லத்தக்கதாக இருந்தது. பின்னர் அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் இதனை பயன்படுத்த வழிவகைகள் செய்யப்பட்டன.

இந்தநிலையில் ஏடிஎம்கார்டுகள் புதியதாக அச்சடித்து வரவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. சேமிப்பு கணக்கு தொடங்கியவர்கள், ஏற்கனவே சேமிப்பு கணக்கு இருந்து டெபிட்கார்டுகள் கேட்டு அஞ்சல் துறையில் விண்ணப்பித்தவர்கள் லட்சக்கணக்கில் காத்திருக்கின்றனர். ஆனால் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு டெபிட் கார்டு விநியோகம் முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு சில இடங்களில் ஏற்கனவே இருப்பு இருந்த டெபிட் கார்டுகள் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. கடந்த ஓராண்டுக்கு மேலாக டெபிட்கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்கள் காத்திருக்கும் நிலைதான் ஏற்பட்டுள்ளது. டெபிட்கார்டுகள் அஞ்சல் துறைக்கு அச்சிட்டு வழங்குவதும் நிறுத்தப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

அஞ்சல் துறை முழுமையாக வங்கி சேவையில் இறங்கியதால் பொதுத்துறை வங்கிகளுக்கும், தனியார் வங்கிகளுக்கும் பெரும் நெருக்கடியும், சவாலும் ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டதாலும், அவர்களது நெருக்கடி காரணமாகவும் அஞ்சல் துறை சார்பில் டெபிட்கார்டுகள் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லை என்பதற்காகவே பொதுத்துறை வங்கிகள் ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடிகளை வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து எடுத்து வந்த நிலையில் அஞ்சல் துறையின் இந்த அறிவிப்பு பொதுத்துறை வங்கிகளை பாதிக்கும் என்ற முடிவின் காரணமாக ஏடிஎம்கார்டு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்னள.

ஏடிஎம்கார்டு நிறுத்தப்பட்டதால் தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்குகளில் பணம் இருப்பு படிப்படியாக குறையத்தொடங்கியது. தபால்துறை ஏடிஎம்களில் பயன்பாடு குறைந்ததால் அவற்றின் பராமரிப்பு செலவுகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஏடிஎம்கார்டு நிறுத்த நடவடிக்கைகள் தபால் துறைக்கு பெரும் இழப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் நாடு முழுவதும் ரூ.17 ஆயிரம் கோடி வரை அஞ்சலக சேமிப்பு கணக்கில் குறைந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தபால் துறையை நஷ்டத்திற்கு இழுத்து செல்வதாக தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியால் திணறி வருகின்ற நிலையில் அஞ்சல்துறையும் அதே நிலைக்கு தள்ளப்படுமோ? என்ற அச்சமும் அதன் ஊழியர்களுக்கு எழுந்துள்ளது. நஷ்டத்தை காரணம் காட்டி தனியார் மயத்திற்கு தபால்துறையை கொண்டுசெல்லும் நடவடிக்கைள் தொடங்கியுள்ளதாக ஏற்கனவே ஊழியர் சங்கங்கள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.