சென்னை ராயப்பேட்டையில் மதுபோதையில் தறிகெட்டு ஓடிய கார் மோதி வங்கி மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக குடிபோதையில் இருந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் முகம்மது அப்துல் கயூம். இவர் எச்.டி.எஃப்.சி. வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு இவர் ஜி.பி. சாலை - உட்ஸ் சாலை சந்திப்பு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கார் சாலையில் தாறுமாறாக ஓடிய னார் இருசக்கர வாகனம் மீது மோதியது. 

இதில், இருசக்கர வாகனத்தில் வந்த முகமது அப்துலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த நபரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த 3 வாலிபர்களையும் பொதுமக்கள் சுற்றி வளைத்து தாக்கினர். அப்போது, அவர்கள் மது போதையில் இருந்தது தெரியவந்தது. பொதுமக்கள் தாக்குதலில் இருந்து 2 வாலிபர்கள் தப்பினர். காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வாலிபரை மட்டும் பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பிய இருவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.