கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்த வண்ணம் உள்ளது.  அந்த வகையில் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 3 ஆம் தேதி அன்று மக்களிடம் பேசிய பாரத பிரதமர் மோடி நமது ஒற்றுமை மற்றும் உறுதியை விட வலிமையான சக்தி இந்த உலகத்தில் எதுவுமே இல்லை.

கொரோனாவால் ஏற்பட்ட இருளை போக்கும் விதமாக நாட்டு மக்கள் அனைவரும் ஏப்ரல் 5 தேதி ஞாயிறு இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்கு, மெழுகு வத்தி, அல்லது செல்போனில் உள்ள டார்ச்சை அடித்து தங்களுடைய ஒற்றுமையை பறைசாற்ற வேண்டும் என கூறினார்.

பிரதமரின் இந்த ஒற்றுமை குரலுக்கு பலர் ஆதரவு கொடுத்த போதிலும், சிலருக்கு அதில் உடல்பாடு இல்லை. எனவே ஆரம்பத்தில் இருந்தே இதற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

பிரதமர் குறிப்பிட்ட தினமான 5ம் தேதியான இன்று, மோடி கூறியது போல், மின் விளக்குகளை அணைத்து விட்டு, சரியாக 9 மணிக்கு 9 நிமிடங்கள் அகல் விளக்கு, மெழுகு வத்தி போன்ற வற்றை ஏற்றமாட்டோம் என்கிற நோக்கத்தில் '#விளக்கு_ஏற்ற_மாட்டோம்' என்கிற ஹாஷ்டாக்கை சிலர் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். 

காலையில் இருந்து தமிழ்நாட்டில் இந்த ஹாஷ்டாக் முதல் மூன்று இடங்களில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

அதே நேரத்தில் பிரபலங்கள் பலர் மோடியின் ஒற்றுமை குரலுக்கு தோள் கொடுக்க, இன்று விளக்கேற்றி ஒற்றுமையின் மூலம் கொரோனாவை விரட்டி அடிப்போம் என கூறி வருகிறார்கள்.